Wednesday, April 1, 2020

துவாதச நாமம்


துவாதச புண்டரம் :
[ஶ்ரீசூர்ணம் (தாயார்) - திருமண் (பெருமாள்) - ஸ்தாநம் - நிறம் - ஆயுதம் ஆகிய  ]
பஞ்சப்பிரமாண  துவாதச நாமங்கள்.

கேசவன்
தோள்களாம் நாலிலும் ஆள்கின்ற சக்கரம் !
நீள்திரு மார்பில் மலர்மகள்சேர் -- வேள்வித்தீ
பொன்னன்! அடியார் திருநெற்றிக் கேசவன் !
அன்னை சிரிதேவி யாம்!
நாரணன்
சங்குதங்கு நாற்கரம்! சேமநல் வீடுசேர்
மங்கலத் தாளினன்! தேவியும் -- பொங்கலைவாய்
தோன்றினாள்! வான்நீல வண்ணத்தெம் அண்ணல்மால்
ஒன்றுமிடம் பத்தர்(மேல்) வயிறு!
மாதவன்
கருநீலம் தோய்நிறமும் நீள்புயம் நான்கில்
பெருவலத்த நாந்தகமும் தாங்கிப் -- பொருந்த
அமலன்அங் கைமா தவன்தன் தேவி
கமலையும் சேரிடம் மார்பு!
கோவிந்தன்
குளிர்முத்தின் வெண்ணிறமும் கோலவில் நான்கும்
மிளிர்முன் கழுத்தின் அமர்ந்து -- அளிபொறை
அன்னை அவள்பெயரும் தண்மதியின் மிக்கொளியாள் !
என்னப்பன் கோவிந்தன் மாது.
விஷ்ணு
தாமரைத் தாதன்ன பொன்னிறத் தோள்கள்
சுமக்கும் கலப்பைஓர் நான்கும் -- நமக்கு
வயிற்றின் வலப்புரம்சேர் விட்டுவவன் மாது
துயக்கறுக்கும் தோன்றக் கிடந்து.
மதுசூதனன்
உலக்கை ஒருநான்கும் தாமரையின் மென்நிறமும்
மாலாய் உலகாளும் மாயோன் -- வலபுயது
செவ்விக்கு செவ்விசேர வைட்டணவி மாதொடும்
தவ்வை அவள்வௌவல் மாய்த்து.
திரிவிக்ரமன்
அனலோன் அணிநிறமும் கைசுரிகை நான்கும்
தனதாகி வேட்டும் வரம்ஈட்டும் -- கோனவன்தோள்
மாட்டுயர் வஞ்சிக் கொடியென் ஏறினாளைத்
தீட்டும் கழுத்தின் வலத்து .
வாமனன்
அருக்கன் அழல்நிறமும் கைநான்கு தாங்கு
உருப்பொலிந்த வஜ்ரமும் எம்மின் - பெருவுதரம்
சேர்இடபால் ஆங்கு அரியவன் தேவியும்
பேர்ந்திடாது மேவும் மகிழ்ந்து.
ஸ்ரீதரன்
வெண்டா மரைமென் நிறமும் பட்டயமும்
கொண்டானை கைநின்ற சார்ங்கம்சேர் -- தண்டா
மரைதா யவளும் திகழுமிடம் நம்தோள்
மறைநூல் இடது புரம்.
ஹிருஷீகேசன்
மின்னின் நிறவண்ணன் மற்கரம் கைபூண்டு
மன்னுபுகழ் மால்தேவ தேவிசேர் -- மன்னன்
திகழ்விடம் நம்மின் கழுத்திட மாக;
புகழது எந்தை குடிக்கு.
பத்மநாபன்
பகலவன் பொன்நிறமும் தன்பெரும் தேவி
அகல்மார்வத் தோடும் அவன்கை -- திகழ்வதாம்
ஐம்படை சேரத் துலங்குவான் பின்முதுகு
தம்மிடமாய் போற்றும் வகைத்து .
தாமோதரன்
உதயபானு போல்நிறமும் காணுலுகில் பேரழகி
யாத மலர்மகள் மங்கல -- நாதனும்
பாசம்கை பற்றி இசைவிடம் பின்கழுத்து,
வாசன்வாய் பேசும் புகழ்ந்து.
--தாசராதி தாஸன்
(அகரம் ) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன்.